இலங்கையில் பரவிய கோவிட் பெருந்தொற்று காரணமாக, நாடு பாரிய பொருளாதார நெருக்கடியைச் சந்தித்த தருணத்தில் செய்தித் தாள்களை அச்சிடும் கடதாசிகளுக்கான தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் நம் சமூகத்தினரால் வெளியிடப்பட்டு வந்த பத்திரிக்கைகள் நின்றுபோன்றது மிகக் கவலையான விடயமே.
அதே நேரம் வெளியாகும் பத்திரிக்கைகள் இன்றைய இளம் சமூகத்தினரையும் உழைக்கும் வர்க்கத்தினரையும், இன்றைய சமூக நிலை குறித்து சிந்திக்க இடம் தராத வகையில், ஆளும் அரசாங்க முதலாளித்துவ ஆதரவு செய்திகளை வெளியிட்டு, நம் சிந்தனைகளை சிதறடிக்கும் பணியை இந்த பத்திரிக்கைகள் செய்து வருகின்றன. இத்தகைய பத்திரிக்கைகள் பெரும்பணக்கார முதலாளிகளால் நடத்தப்படுபவை.
அத்தகைய செய்தித்தாள்கள் ஏதோ போகிற போக்கில் ஏழை உழைக்கும் மக்களைப்பற்றி சில செய்திகளை வெளியிட்டு அனுதாபம் காட்டிக்கொள்கின்றன அவ்வளவுதான். அவர்களின் முக்கிய நோக்கமே வருவாய் தரும் விளம்பரம் மற்றும் முதலாளிகளுக்கு ஆதரவான கொள்கைகள் மற்றும் செய்திகளை வெளியிடுவதுதான்.
இப்படிப்பட்ட சூழலில் தன்னைச் சுற்றியுள்ள சமூகம் சார்ந்த சூழல் மற்றும் பிரச்சனைகளைப் பற்றியும், மக்களின் வாழ்வாதார நிலைபற்றியும் அறிந்துகொண்டு, அத்தகைய சூழ்நிலைகளை மாற்றியமைக்கும் எண்ணங்களை வளர்த்தெடுக்க, நம்மவர்களின் மத்தியில் நடாத்தப்பட்டுவரும் பத்திரிக்கைகளை ஊக்கப்படுத்தவேண்டியது எங்களது கடமை.
நம்மவர்களின் மத்தியில் நல்ல பல சிந்தனைகளை தூண்டிவரும், சிங்கள மொழியில் வெளிவரும் Eksath Newspaper “எக்ஸத்” என்ற பத்திரிக்கைக்கு தேவையான நிதி பங்களிப்பொன்றை தூய தேசத்திற்கான இயக்கத்தின் சார்பில் அதன் ஆசிரியர் ஷாஜகான் அவர்களிடம் கையளித்தோம்.